நம் தமிழக விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து தங்களது போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பிரதமரின் கவனத்தை ஈர்த்திடுவதற்காக ஜந்தர் மாந்தர் பகுதியில் நித்தமும் பல விதமான போராட்டங்களை நிகழ்த்தி வருகின்றனர். எலிக்கறி உண்ணுவது, சாலையில் உருள்வலம் போடுவது, பிச்சை எடுப்பது, நிர்வாணம், மண்டையோட்டில் மாலை அணிவது, அரை மொட்டை, சேலை கட்டி தாலியறுப்பு உள்ளிட்ட கவன ஈர்ப்பு போராட்டங்களை முன்னேடுத்துவிட்டனர். இந்த நிலையிலும் மத்திய அரசின் பார்வை இவர்கள் மீது பட தயங்குகிறது. இருப்பினும், நம்பிக்கையை இழக்காமல் தங்களது கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றியே ஆகவேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் போராட்டத்தை தொடர்கின்றனர்.
இதே போன்ற விடாகண்டன் போராட்டங்களை டெல்லி கண்டிராமல் இல்லை. கடந்த 1988ம் ஆண்டு உத்திரப் பிரதேச மாநில விவசாயிகள் நடத்திய கவன ஈர்ப்பு போராட்டம் குறிப்பிடத்தக்கது. சுமார் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட விசாயிகள், டெல்லியில் உள்ள ராஜ்பாத்தில் ஒரே நேரத்தில் குவிந்தனர். அவர்கள் தங்களது டிராக்டர், ஆடு மாடுகள், குழந்தைகள், உறவினர்களையும் தங்களுடன் அழைத்து வந்திருந்தனர். அங்கேயே சில நாட்கள் தங்கி, தேவையான உணவுகளை சமைத்து, வாழத் தொடங்கிவிட்டனர். கரும்பு கொள்முதல் விலையை உயர்த்துவதும், கூலிகளை உயர்த்துவதும் போராளிகளின் கோரிக்கைகளாக இருந்தன. அவர்களின் பரிதாபங்களை உலகெங்கும் எடுத்துச் சென்றன தேசிய ஊடகங்கள். இதையடுத்து ராஜீவ்காந்தி அரசு அவர்களுடைய கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றியது.
இன்று தமிழக விவசாயிகள் நடத்திக்கொண்டிருக்கும் போராட்டங்கள் தேசிய அளவில் ஓரளவு கவனத்தை ஈர்த்திருந்தாலும், போராட்டமென்பது இன்னும் பெரிய அளவில் வெடிப்பதற்குள் மோடி அரசு நமது விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்மொழிய வேண்டும் என்பதே நம்முடைய எண்ணமாக இருக்கிறது. தமிழகத்தில் இருந்து மாபெரும் அளவில் படை திரட்டிக் கொண்டு போக முடியும் என்ற நம்பிக்கை இருந்தாலும் சாதகமான சூழ்நிலையை உருவாக்கும் உத்திகளை நிலைநிறுத்த வேண்டிய தருணம் இதுவே என்பதை நாம் உணர்ந்திருக்கிறோம்.
அரசாங்கம் எங்களை ரயிலில் அடைத்து தமிழ்நாட்டிற்கு அனுப்பினால், நாங்கள் செயினை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்துவோம். எங்கள் மீது போலீசாரை ஏவி தடியடி நடத்தினால், ரயிலிலிருந்து கீழே குதிப்போம். எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்த போராட்டத்திலிருந்து யாரும் பின்வாங்கமாட்டோம். எங்கள் உயிர் போகும் வரையும் போராட தயார் என அய்யாகண்ணு கூறியிருக்கிறார். அய்யாக்கண்ணுதான் கடந்த மார்ச் 14ம் தேதியிலிருந்து இந்த போராட்டத்தை துவக்கி முன்நடத்தி வருகிறார்.