“இவர்களும் உங்கள் தாத்தா பாட்டிகள்தான்…” ஒரு விவசாயி மகனின் கண்ணீர் கடிதம்!

தொழில்நுட்பமும் வறட்சியும் விவசாயத்தை விழுங்கிக் கொண்டிருக்கும் கடைசி தருணத்தில், அனைவரின் முகத்தையும் பார்த்து கண்ணீர் சிந்திகொண்டிருக்கும் இந்நாட்டுடைய கடைசி விவசாயியின் மகன் எழுதிய கடிதம்.

என் அன்புக்குரிய சகோதர சகோதரிகளே,

தொழில்நுட்பமும் வறட்சியும் விவசாயத்தை விழுங்கிக் கொண்டிருக்கும் கடைசி தருணத்தில், அனைவரின் முகத்தையும் பார்த்து கண்ணீர் சிந்திகொண்டிருக்கும் இந்நாட்டுடைய கடைசி விவசாயியின் மகன் எழுதுகிறேன்…
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நமது உழவின் மீது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல மத்திய அரசு, மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை நம் மீது வீசி, கொஞ்சநஞ்ச பசுமையையும் ஒரேயடியாக அழிக்க நினைக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம், விவசாயக் கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரண நிதி போன்ற விடயங்களிலும் கூட ஓட்டு அரசியல் செய்வது பகிரங்கமாகவே தெரிகிறது. இந்தியா ஒரு விவசாய நாடு என எல்லா மேடையிலும் பேசிக்கொண்டிருக்கிறார் பிரதமர் மோடிக்கு அதன் மகத்துவம் புரியவில்லை என்றுதான் தோன்றுகிறது. வரலாற்றில் இல்லாத அளவிற்கு முதல்முறையாக மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயத்திற்கு பல லட்சம் கோடிகளை கொட்டிக் கொடுத்துள்ளது மத்திய அரசு. பிரதமர் நரேந்திரமோடிக்கு தனது பா.ஜ.க. அரசு ஆளும் மாவட்டங்களில் இருக்கும் விவசாயிகளின் கண்ணீரை துடைக்க மட்டும்தான் கரம் கொடுப்பாரா? ஒட்டுமொத்த நாட்டினுடைய பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கான நிலைப்பாட்டுடன் தான் மோடி திகழ்கிறாரா? காடுகளை அழித்து ஆன்மிகம் வளர்க்கும் தனியொரு நபரின் அழைப்புக்கு கட்டுப்பட்டு, தேடி வந்து தாளம் தட்டிய பிரதமரால், ஏன் இன்று நம் விவசாயிகளின் அபயக்குரல்களுக்கு செவி சாய்க்க முடியவில்லை? தமிழகத்தை ஆளும் அரசியல்வாதிகளை பொறுத்தவரை, சசிகலா சிறையில் இருப்பது ஒன்றுதான் தலையாய பிரச்சினை என எண்ணிக்கொண்டு ஆழ்ந்த கவலையில் இருக்கிறார்கள்.

கடந்த நான்கு நாட்களாக, தலைநகர் டெல்லியில் தமிழக விவசாயிகள் போராடிக்கொண்டிருக்கிறனர். யார் அவர்கள்? நம் தாத்தாக்களும், பாட்டிக்களும்தான். நமக்கான ஆரோக்கியமானதொரு எதிர்காலத்தை இந்த மண்ணில் விதைத்து அறுவடை செய்து கொடுப்பவர்கள் இவர்கள்தானே? ஒரு தாய் தன் பிள்ளைக்கு சத்தான உணவுகளை ஊட்டி வளர்த்து ஆளாக்குகிறாள். இந்த தாயை போலத்தானே விவசாயிகளும் நம் அனைவரின் ஜீவனாம்சத்தை பேணுவதற்காக சேற்றில் இறங்கி மாட்டுன் மாடாக உழைக்கிறார்கள்? சமூக ஊடகங்களில் இந்த கட்டுரையை நீங்கள் பதிவோட்டமாக படித்துவிட்டு, சோக ஸ்மைலீ போட்டுவிட்டு இயன்றவரை இத்தகவலை பகிர்ந்துவிட்டு, இத்துடன் நம் கடமை முடிந்ததென நகர்ந்து போகும் ஆள் இல்லை என எனக்கு நன்கு தெரியும். நிச்சயமாக நம்மால் இந்த விவசாயிகளுக்கு ஏதும் செய்ய இயலவில்லையே என வருத்தப்பட்டுக் கொண்டிருப்பீர்கள். நேரம் இல்லாத வாழ்க்கை, பணத்தை பிடிக்கும் பந்தயம், அவசர நகர்வுகள் என சொல்லி நம்மை நாம் நொந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இவையனைத்தையும் வெல்ல நமக்கு நல்ல உயிரோட்டம் வேண்டும். அதற்கு நாம் சோற்றை தின்ன வேண்டும். சோறு கிடைக்க நம் விவசாயிகள் சேற்றில் இறங்க வேண்டும் என்பதை மனதில் ஆழ பதித்துக்கொள்வோம். நமது உயிரை காப்பதற்காக, டெல்லியில் அரைப்பகுதி ஆடைகளை துறந்து ஆதிரூபமாய் போராடிக் கொண்டிருக்கும் நமது விவசாயிகளுக்கு, இங்கிருந்து நம்மால் இயன்ற அளவுக்கு உத்வேகத்தை கொடுத்து நமது குறைந்தபட்ச ஆதரவை பதிவு செய்வோமே தோழர்களே. சினிமாவில் இருப்பவர்களின் தனி நபர் பிரச்சனைகளை அவரவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

உங்கள் சந்ததியினரையும், உங்களது ஆரோக்கியமான எதிர்காலத்தையும், விவசாயிகளான நாங்கள் நல்ல முறையில் உருவாக்கித் தருகிறோம். இத்திருநாட்டை இயற்கைச் செல்வாக்கு மிகுந்த நாடாகவும், இயற்கைப் பொருளாதார சக்தி மிகுந்த நாடாகவும் நாங்கள் மாற்றிக் காட்டுகிறோம். இதற்கெல்லாம் எங்கள் தோழர்களாகிய நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அயலகத்திலிருந்து வந்த பகட்டு உணவுகளை தவிர்த்து இயற்கைச் சூழலையும், இயற்கை உணவுகளையும் நாடி வாழ வேண்டும். உங்களுடைய தேவைகள் எவ்வளது பெரிதெனினும் எங்களது உடல் உழைப்பாலும், அறிவாற்றலாலும் அவற்றை பூர்த்தி செய்ய இயலும். உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்குவீர்கள் என்றால், இளநீர் பனையை நாடுவீர்கள் என்றால், உங்களுக்காக நாங்கள் எங்கு வேண்டுமானாலும் போராட தயாராக இருக்கிறோம்.

இப்படிக்கு
விவசாயி மகன்

—-

சேனல்42 தமிழ் குழு சார்பாக ஓர் வேண்டுகோள்:

மழை, தண்ணீர் போன்ற இயற்கைக் கொடைகள் கிடைக்காமல் போனதற்கும், வறட்சிக்கும் ஒரு வகையில் நாம்தான் காரணமாகி நிற்கிறோம் தோழர்களே. பூமிதாயின் மீது கோடிக்கணக்கான துளைகளிட்டு நிலத்தடி நீர் வற்றும் வரை உறிஞ்சிவிட்டோம். மரங்களை நட்டோம்; ஆனால் அதை பாதுகாக்க மறந்தோம். வீட்டின் அழகுக்கும் பகட்டுக்கும் ஏற்றவாறு செடிகளை வளர்த்தோம். நீர்நிலைகளை அழித்து ரியல் எஸ்டேட்டாக பட்டா போட்டோம். லட்சம் லட்சம் டன்னாக மணல் அள்ளி வீடுகளை கட்டினோம்; ஆறுகளை வீழ்த்தினோம். கால்வாய்களை பாதுகாக்காமல் அதில் கழிவுநீரையும் குப்பைகளையும் கொட்டி மூடினோம். இவ்வளவு தவறுகளையும் நம்மில் சிலர் செய்தபோதும் கூட, அவர்களை தடுத்து நிறுத்தும் அறிவுணர்வை இழந்தோம். இவ்வாறாக இயற்கை அழிவிற்கு காரணமாகி நிற்கும் நாம் இன்று மீண்டும் விவசாயத்தை காப்பாற்ற நினைக்கிறோம் என்பதை உணர வேண்டிய தருணம் இதுவாகும். இனியாவது மேற்கூறிய தவறுகளை தவிர்த்து, அழிக்கப்பட்ட இயற்கைச் சூழலை மீட்டெடுப்போம். வளமான நாட்டை இளைஞர்கள் நாம் முன்னின்று உருவாக்கிடுவோம்.

இதையும் படிங்க – இதை செய்தால் 2050ம் ஆண்டிற்கு மேல் தண்ணீர் பஞ்சமே இருக்காது. விவசாயம் வளர்ச்சி அடைந்திருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *