மோயாறு – நம்மால் அதிகம் பேசப்படாத ஆறு என்பதால்தான் களங்கமின்றி என்றும் வற்றா ஜீவநதியாக ஓடிக்கொண்டிருக்கிறது இந்த ஆறு. மேற்கு தொடர்ச்சி மலையின் தமிழக எல்லைக்குட்பட்ட பகுதியில் உருவாகி, கர்நாடகம் வழியாக பாய்ந்தோடுகிறது. பவானியின் துணை ஆறுகளில் மிகப்பெரிய ஆறாக திகழ்வதும் இந்த ஆறுதான். கேட்கவே புதிதாகவும், ஆச்சரியமாகவும் இருக்கும் இந்த ஆற்றைப் பற்றி இக்கட்டுரையில் விரிவாக படிக்கப் போகிறோம் வாசகர்களே.
மேற்கு தொடர்ச்சி மலையின் முக்குருத்தி பகுதியில் பிறக்கும் மோயாறு, அங்கிருந்து பைக்காரா அணைக்குக் சென்று கூடலூர் வழியாக கர்நாடகத்தின் பந்திப்பூர் தேசியப் பூங்கா, முதுமலை பூங்கா, சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதிகளை உள்ளடக்கிய தொங்குமரஹெடா பள்ளத்தாக்கு, தெப்பக்காடு வழியாக பயணித்து, பவானி சாகர் அணையை வந்தடைகிறது. சத்தியமங்கம், பவானி, ஈரோடு வரையிலான பாசனத்தில் இந்த மோயாற்றின் பங்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. ஜீவநதி என்ற பெருமையை தாங்கி நிற்கும் இந்த ஆற்றில் என்றுமே தண்ணீர் வளம் வற்றுவதில்லை. மலையக வனங்களுக்குள் பயணிக்கும் ஆறு என்பதால், இதில் மனிதர்களால் களங்கப்படாத ஆறாக விளங்குகிறது.
பவானி ஆறு நீலகிரியின் தெற்கில் பாய்கிறது என்றால், மோயாறு நீலகிரியின் வடக்கில் சுதந்திரப் பேரார்வத்துடன் பாய்ந்தோடுகிறது. இந்த இரு ஆறுகளும் இறுதியாக சந்திக்கும் இடத்தில்தான் பவானி சாகர் அணை வீற்றிருக்கிறது. மோயாற்றின் தெற்கு பகுதியும் வடக்கு பகுதியும் வெவ்வேறான உயிர்ச் சூழலை கொண்டிருக்கின்றன. தெற்கே உள்ள கொடநாடு, சோலைவனங்களைக் கொண்ட குளிர் பிரதேசம் ஆகும். வடக்கில் அமைந்துள்ள சத்தியமங்கலம் புதர் காடுகளைக் கொண்ட வெப்ப பிரதேசம் ஆகும். கொடநாட்டில் ஜீவிக்கும் கருமந்தி, இருவாச்சிப் பறவைகள் போன்ற உயிரினங்கள் ஆற்றில் வடக்குப் பகுதியில் உயிர்வாழ்வது கிடையாது. இதுதான் மோயாறு உயிர்ச்சூழலின் தனிச்சிறப்பு. சுமார் 50 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாய்ந்தோடும் மோயாற்றின் கரைகளில், 127 வகையான பறவை இனங்கள் வாழ்வதாக பல்லுயிர் நோக்க ஆராய்ச்சியாளர்களின் ஆய்வறிக்கை கூறுகிறது. கம்புள் கோழிகள், மூன்று வகையான மீன்கொத்திகள், சாம்பல் நாரைகள், கருடன், மர ஆந்தைகள், வாலாட்டிகள், பிணந்தின்னி கழுகுகள் போன்ற பறவைகள் குறிப்பிடத்தக்கவை.